தமிழக மக்களுக்கு ஏமாற்றம்: பழனிசாமி!!!

சென்னை: தி.மு.க.,வின் வாக்குறுதிகள் திட்டங்களாக அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது”, என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் தொடர்பாக நிருபர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழக பட்ஜெட் மக்களை ஏமாற்றும் வெத்துவேட்டு அறிக்கையாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை விட்டு சென்ற போது ரூ.4.85 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால், 2020-21 காலகட்டத்தில் தி.மு.க., ஆட்சியில் ரூ.1.08 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். ஆனால், முக்கிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை. நடப்பாண்டு மேலும் கடன் வாங்க திட்டமிட்டுள்ளனர். 2020 முதல் 23 வரை 2.28 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் இருந்தாலும், மூலதன செலவுகளுக்காக கடன் பெற்றோம். கோவிட் பெருந்தொற்று இருந்த காலகட்டம். அப்போது கடுமையான நிதிச்சுமை இருந்தது. வருமானம் குறைவாக இருந்தது. கோவிட் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால், எவ்விதத்திலும் வருமானம் கிடைக்கவில்லை.

ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இயல்பு நிலை திரும்பியது. தொழிற்சாலைகள் இயங்கின. பெட்ரோல், டீசல் அதிகளவு விற்பனை ஆகியது. பத்திரப்பதிவு அதிகளவு நடந்தது. போக்குவரத்து துறையில் வருமானம் கிடைத்தது. வருமானம் அதிகரித்த போது கடன் குறைய வேண்டும். ஆனால், தற்போது வருவாய் அதிகரித்தும், கடன் குறையவில்லை. தி.மு.க., அரசு முறையாக செயல்படவில்லை.

மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்படவில்லை. மகளிர் உரிமை தொகை வழங்காமல் இருக்க சாக்கு போக்கு சொல்கின்றனர். கல்விக்கடன் தள்ளுபடி பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த போதும், தமிழகத்தில் டீசல் விலை குறைக்கப்படவில்லை. கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பட்டியலில், கட்டுமான பொருட்கள் சேர்க்கப்படும் என்ற திமுக.,வின் வாக்குறுதி நிறைவேற்றவில்லை.

தேர்தல் நேரத்தில் திமுக., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக அரசின் பட்ஜெட் வார்த்தை ஜாலம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாய்ப்பந்தல். தி.மு.க.,வின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.