ஜப்பான் பூகம்பத்தில் 4 பேர் பலி; 97 பேர் காயம்!!!
டோக்கியோ: ஜப்பானில் நேற்று முன்தினம் இரவு தாக்கிய பூகம்பத்தில் 4 பேர் பலியானார்கள். 97 பேர் காயமடைந்தனர். ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமாவில் நேற்று முன்தினம் இரவு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 60 கி.மீ ஆழத்தில் இதன் மையம் இருந்தது. இந்த பூகம்பத்தால் தலைநகர் டோக்கியோ உட்பட கிழக்கு ஜப்பானின் பெரும் பகுதிகள் அதிர்ந்தன. இதனால், வீடுகளும் கட்டிடங்களும் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இஷ்னோமாகி கடற்பகுதியில் பேரலைகள் எழுந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூகம்பம் காரணமாக டோஹோகு ஷிங்கன்சென் என்ற இடத்தில் 100 பயணிகளுடன் சென்ற அதிவேக ரயில் தடம் புரண்டது. ஆனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று காலை சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட பிறகு மின் விநியோகம் தொடங்கியது. புகுஷிமா அணுமின் நிலையத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் புமியோ கிஷிடா, “பூகம்பத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் 4 பேர் உயிர் இழந்துள்ளனர். 97 பேர் காயமடைந்துள்ளனர்,” என்றார். கடந்த 2011ம் ஆண்டு இதே மாதத்தில் புகுஷிமாவில் 9.0 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால், சுனாமி தாக்கியது. புகுஷிமா அணுஉலை பாதிக்கப்பட்டு ஜப்பான் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. இதன் 11வது ஆண்டை நினைவு கூர்ந்த சில தினங்களில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.