மக்களவையில் நேற்று சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், உள்நாட்டு சுற்றுலா ஊக்குவிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 15 சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டில் கொரோனாவுக்கு முன் சுற்றுலாத்துறையில் 3.8 கோடி பேர் பணியாற்றி வந்தனர். ஆனால் கொரோனாவின் 3 அலைகள் காரணமாக சுமார் 2.15 கோடி பேர் வேலை இழந்து விட்டனர்’ என ெதரிவித்தார்.
இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முதல் அலையில் 93 சதவீதமும், 2-வது அலையில் 79 சதவீதம், 3-வது அலையில் 64 சதவீதமும் குறைந்து விட்டதாக கிஷன் ரெட்டி கூறினார்.
இந்த துறைக்கு உதவுவதற்காக பயண ஏஜென்டுகள் மற்றும் சுற்றுலா பொறுப்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரையும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கிஷன் ரெட்டி கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.
