கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என பள்ளி நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா திட்ஷித் ஆகிய 3 நீதிபதிகள்  அடங்கிய அமர்வு ஒற்றுமையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இஸ்லாமிய மதத்தின் அடிப்படியில் ஹிஜாப் என்பது அவசியமாக பின்பற்ற கூடிய ஒன்று வழிகாட்டு நெறிமுறை கிடையாது. அதனால் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர விதிக்கப்பட்ட தடை செல்லும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து வரக்கூடாது என கல்லூரி நிர்வாகங்கள் முடிவு செய்தால் அது சட்டப்படி செல்லும் என கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையும் செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதன் மூலம் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை அமலில் இருக்கும் என தெரியவந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக கர்நாடக மாநிலம் முழுவதும் ஹிஜாப்க்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த போராட்டாத்தின் காரணமாக சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 8-ம் தேதி மாநிலத்தில் குறிப்பாக உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் போராட்டம் வன்முறையில் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னதாக மேற்கூறிய அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பெரும்பான்மையான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.