உக்ரைன்-ரஷியா போரை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- இந்தியா மீண்டும் வலியுறுத்தல்!
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 19-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷிய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டுகின்றன.
இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:
பகையை நிறுத்தும் நோக்கில் நேரடி தொடர்புகள் மற்றும் பேச்சு வார்த்தைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இது தொடர்பாக ரஷிய கூட்டமைப்பு மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா தொடர்பில் உள்ளது. மேலும் ரஷிய-உக்ரைன் மோதல்கள், இரு தரப்பிலும் ஏற்படுத்திய மனித உயிரிழப்புகள் குறித்து இந்தியா கவலை தெரிவிக்கிறது. இந்த போர் ஒரு மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
உக்ரைனில் நடக்கும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எங்கள் பிரதமர் அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், மேலும் (இரு தரப்பு) உரையாடல் மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கையை தவிர இதில் வேறு வழியில்லை.
ஐநா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் நாடுகள் இடையேயான இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்துகிறது.
இதுவரை, சுமார் 22,500 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். (இந்தியர்களை அழைத்து வரும்) எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகளுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.