பெண்கள் புரோ ஆக்கி லீக்: ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி பதிலடி!
பெண்களுக்கான 3-வது புரோ ஆக்கி லீக் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனியுடன் மல்லுக்கட்டியது. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
29-வது நிமிடத்தில் ஜெர்மனியின் பெலிசியா விடெர்மானும், இந்திய தரப்பில் 40-வது நிமிடத்தில் நிஷாவும் கோல் போட்டனர். இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியா தனது முதல் 3 வாய்ப்புகளையும் கோலாக மாற்றியது.
எதிரணியின் பெனால்டி வாய்ப்பு அனைத்தையும் இந்திய கோல் கீப்பர் சவிதா முறியடித்தார். முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. முன்னதாக இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது லீக்கில் இதே போல் பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி வெற்றி பெற்றிருந்தது. அதற்கு இப்போது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் ஏப்ரல் 2 மற்றும் 3-ந்தேதிகளில் இங்கிலாந்தை சந்திக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.