மேகதாதுவில் அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கும் : கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்!
பெங்களூரு : மேகதாது அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து இருப்பது காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. பெங்களுருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போது 1.30 கோடியாக உள்ள பெங்களூரு மாநகரின் மக்கள் தொகை வரும் 2040ம் ஆண்டுக்குள் 4 கோடி வரை உயரும் நிலை உள்ளதாக குறிப்பிட்டார். பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டே மேகதாது அணையை துரிதப்படுத்த வேண்டியது அவசியமாவதாக அவர் தெரிவித்தார்.
மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய சுற்றுசூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி விரைவில் கிடைக்க வேண்டும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். அதனால் தான் கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டே மேகதாது அணை திட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது பேச்சு. தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி பாசன பகுதியில் விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.