தாக்குதலை திடீரென விரிவுப்படுத்தியது ரஷ்யா மேற்கு உக்ரைன் மீது ஏவுகணைகள் வீச்சு: விமானப்படை தளம், விமான நிலையம் தகர்ப்பு!

 உக்ரைன் மீதான தாக்குதலை ரஷயா நேற்று திடீரென விரிவுப்படுத்தியது. இதுவரை கண்டுக் கொள்ளாமல் இருந்த மேற்கு உக்ரைன் பகுதிகளில் ஏவுகணைகள், குண்டுகள் வீசி தாக்கியது. இதில், விமானப்படை தளமும், விமான நிலையமும் அழிக்கப்பட்டது. மேலும், தலைநகர் கீவ்வை முற்றுகையிட்டு இருந்த ரஷ்யாவின் பிரமாண்ட படை, திடீரென பிரிந்து நகரை சூழ்ந்து வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் நேற்று 16வது நாளை எட்டியது. ஏற்கனவே பல்வேறு நகரங்களையும், அணுமின் நிலையங்களையும் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷ்ய படைகள்,  தலைநகர் கீவ், நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவ், துறைமுக நகரமான மரியுபோல் ஆகியவற்றை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த நகரங்களில் உக்ரைன் வீரர்கள் கடும் சவாலை ஏற்படுத்தி வருகின்றனர்.  எனவே, உக்ரைன் அரசின், ராணுவத்தின் மன உறுதியை குலைக்கும் வகையில், பொதுமக்கள் வசிக்கும் இடங்களின் மீதும், மருத்துவமனைகளின் மீதும் நேற்று முன்தினம் குண்டுகள் வீசி ரஷ்ய படைகள் தாக்கின. மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த  தாக்குதலை தங்கள் படை நடத்தவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. உக்ரைன் ராணுவமும், மேற்கத்திய நாடுகளும் தங்கள் நாட்டு  படையின் மீது வீண் பழி போடுவதற்காகவே, இந்த மருத்துவமனைகளின் அருகே வெடிகுண்டை பொருத்தி வெடிக்கச் செய்துள்ளன என்று அது குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய படைகள் நேற்று திடீரென விரிவுப்படுத்தின. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மேற்கு உக்ரைன் பகுதிகளை கண்டு கொள்ளாமல் இருந்த ரஷ்ய படைகள் நேற்று இந்த பகுதிகளில் நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில், லுட்ஸ்க் என்ற இடத்தில் உள்ள உக்ரைன் விமானப்படை தளம் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 2 விமானப்படை வீரர்கள் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்தனர். மேலும், இவானோ-பிரான்கிவ்ஸ்க் என்ற இடத்தில் உள்ள விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இந்த விமான நிலையம் சேதமாகி , தீப்பற்றி எரிந்தது.

அதே நேரம், மரியுபோல், கார்கிவ் மீதான தாக்குதலும் நேற்று தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், தலைநகர் கீவ்வின் அருகே பல கிமீ தூரத்துக்கு நிறுத்தப்பட்டு இருந்த ரஷ்யாவின் பிரமாண்ட படைப்பிரிவு நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்தன. இவற்றின் ஒரு பிரிவு கீவ்வை சுற்றியுள்ள காடுகளுக்குள் நுழைந்தது. இதனால், கீவ் நகரின் மீது அடுத்த சில நாட்களில் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என தெரிகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.