ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தனித்தனி எண்கவுண்டர்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

ஜம்மு: காஷ்மீரில் 3 இடங்களில் நடைபெற்ற தனித்தனி எண்கவுண்டர்களில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். புல்வாமாவின் ஷுவாக்லன் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

அதேபோல், காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்திலும் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சண்டை நடைபெறும் பகுதியில் 2-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார், “நாங்கள் நேற்று இரவு 4-5 இடங்களில் கூட்டு ராணுவப் பணிகளைத் தொடங்கினோம். புல்வாமாவில் 1 பாகிஸ்தானியர் உட்பட 2 ஜெய்ஸ்-இ-முகம்மது பயங்கரவாதிகளும், கந்தர்பால் மற்றும் ஹந்த்வாராவில் தலா ஒரு லஷ்கர் பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர். ஹந்த்வாரா & புல்வாமாவில் துப்பாக்கி சண்டை நிறைவடைந்துள்ளது. மேலும் 1 பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.