நொய்டாவும்… பதவி இழப்பும்..!!!
உபி.யில் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டாவுக்குச் சென்ற உத்தரப் பிரதேசத்தின் எந்த முதலமைச்சரும் ஆட்சியை இழக்க நேரிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. 2007ல் நொய்டாவுக்கு சென்ற மாயாவதி, 2012ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார். சமாஜ்வாடி கட்சியின் முலாயம் சிங் யாதவ், பாஜ.வின் ராஜ்நாத் சிங் மற்றும் கல்யாண் சிங் ஆகியோர் தாங்கள் முதலமைச்சராக இருந்தபோது நொய்டாவுக்குச் செல்வதைத் தவிர்த்தனர். 2012ம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் நொய்டாவுக்கு செல்வதைத் தவிர்த்தார்.
2013ம் ஆண்டு, நொய்டாவில் நடந்த ஆசிய வளர்ச்சி வங்கி உச்சி மாநாட்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக பங்கேற்றார். இதில், பதவி போய் விடும் என்ற பயத்தில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ளவில்லை. அதன்பின், 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. 1988ல் முதல்வராக இருந்த வீர் பகதூர் சிங் நொய்டாவிலிருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, ஜூன் 1988ல் பதவி விலக நேரிட்டது. இதனால், ‘நொய்டா துரதிர்ஷ்டம்’ பரவலானது. ஆனால், 2017ம் ஆண்டு உ.பி.யில் ஆட்சிக்கு வந்த யோகி ஆதித்யநாத், உ.பி முதல்வராக ஆனதில் இருந்து ஏறக்குறைய 12 முறை நொய்டாவுக்குச் சென்று வந்துள்ளார். ஆனால், இந்த தேர்தலில் அவர் மீண்டும் வென்று உள்ளதால், ‘நொய்டா துரதிர்ஷ்டம்’ தகர்த்து எறியப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.