சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு… சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு!!
சிறை அதிகாரிகளுக்கு சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சசிகலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அவருடன் இளவரசி, சுதாகரனும் சிறைதண்டனை அனுபவித்தனர். அப்போது சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்தது போல் வீடியோ ஒன்றும் பரவியது. சிறையில் சொகுசாக இருப்பதற்கு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்றவாளிகளாக சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து 24வது பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சசிகலா, இளவரசி, கிருஷ்ணகுமார், அனிதா, கஜராஜ மகனுார் ஆகிய ஐந்து பேருக்கும் சம்மனை அனுப்ப பிப்ரவரி 11ம்தேதி நீதிபதி லட்சுமிநாராயணன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் பெங்களூரு சென்ற சசிகலா,இளவரசி ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இருவரும் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர், இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சசிகலா, இளவரசி ஆகியோருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இருவரும் தலா ரூ.3 லட்சம் பாண்ட்-ஐ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், 2 தனிநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.