உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்வீட்!
உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக கூட்டணி 273 இடங்களில் வெற்றிபெற்றது. இது கடந்த 2017 தேர்தலில் பாஜக வென்றதை விட 49 இடங்கள் குறைவாகும். இந்நிலையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, 111 இடங்களிலும், அதன் கூட்டணி 125 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
இது 2017 சட்டப்பேரவை தேர்தலில் பெற்றதை விடவும் 73 தொகுதிகள் அதிகமாகும். இந்நிலையில் இன்று காலை அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதை காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி எண்ணிக்கை இரண்டரை மடங்கு அதிகரித்ததற்கும், வாக்கு வங்கில் ஒன்றரை மடங்கு அதிகமானத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்த சரிவு தொடரும் என்று தெரிவித்துள்ள அவர், பாஜகவின் பாதிக்கும் மேற்பட்ட பொய்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
மீதமுள்ளவை தொடரும்; பொதுநலனுக்கான போராட்டம் தொடரும் என்றும் பதிவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஐந்தாண்டு பதவிக் காலத்திற்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் முதல் முதல்வர் என்ற வரலாற்றை யோகி ஆதித்யநாத் உருவாக்கியுள்ளார். 1985க்குப் பிறகு உ.பி.யில் ஒரு கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை என்பது நினைவுகூரத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.