லடாக் மோதல் பற்றி 11ம் தேதி இந்தியா – சீனா 15ம் கட்ட பேச்சு

கிழக்கு லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான 15வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பாங்காக் சோ, கல்வான், கோக்ரா பகுதிகளில் ராணுவத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக, இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் 14 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில், படைகளை வாபஸ் பெறுவது, சுமூக தீர்வு எட்டுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போதும் கூட, இரு நாடுகளும் ஏறக்குறைய 50 முதல் 60 ஆயிரம் வீரர்களை எல்லையில் நிறுத்தி உள்ளன. ஆனால், சமீப காலமாக இரு தரப்பும் சுமூக தீர்வை எட்டுவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நாளை மறுநாள் இந்திய எல்லைப் பகுதிக்குட்பட்ட சுஷூல் மோல்டோவில் இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான 15வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், மீதமுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுவது உள்ளிட்டவை குறித்து சுமூக தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.