பெண்கள் உலக கோப்பை 2022: இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்!
நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (வியாழக்கிழமை) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க்கில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் சோபி டேவின் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
வலுவான நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் மந்தனா, சினே ராணா, பூஜா வஸ்ட்ராகர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். பந்து வீச்சில் ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜூலன் கோஸ்வாமி, சினே ராணா அசத்தினார்கள்.
அந்த வெற்றி உத்வேகத்தை தொடர இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்தியாவின் சவாலை முறியடிக்க நியூசிலாந்து அணி போராடும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இதுவரை 53 சர்வதேச ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 32-ல் நியூசிலாந்தும், 20-ல் இந்தியாவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.