உக்ரைனில் இருந்து பாகிஸ்தான் பெண்ணை மீட்ட இந்திய தூதரகம்!
இஸ்லாமாபாத்: உக்ரைனில் போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேற்றியதற்காக பாகிஸ்தானை சேர்ந்த ஷபீக் என்ற பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய தூதரகத்துக்கும் நன்றி கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் பல பகுதிகளை கைப்பற்றி, முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ் புறநகர் பகுதிகள், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், குடியிருப்பு கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் அனைத்தும் குண்டுவீச்சில் தரைமட்டமாகி உள்ளன. 13வது நாளாக நேற்றும் தொடர்ந்து தாக்குதல் நடந்ததால், மெட்ரோ ரயில் நிலையங்கள், பதுங்கு குழிகளில் பதுங்கி உள்ள மக்கள் உணவு, தண்ணீர், மருந்து கிடைக்காமல் தவிக்கின்றனர்.
அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறும் வகையில், தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி ஆகிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்படி, இரு நாட்டு பிரதிநிதிகளும் ஒப்புக் கொண்டபடி மனிதாபிமான பாதை வழியாக மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ஒன்றிய அரசு மீட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆஸ்மா ஷபீக் என்ற பெண்ணை இந்தியா மீட்டுள்ளது.
தன்னை மீட்டதற்கு உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தான் பெண் ஷபீக் நன்றி கூறினார். இது தொடர்பாக பேசிய அவர்; வணக்கம் என் பெயர் ஆஸ்மா ஷபீக். எனது நாடு பாகிஸ்தான். இங்கு நிலை மிகவும் நெருக்கடியாக உள்ள நிலையில் பாதுகாப்பாக நான் வெளியேற இந்திய தூதரகம் உதவியுள்ளது. விரைவில் எனது குடும்பத்தினரை சந்திக்க உதவியதற்காக இந்திய தூதரகத்திற்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் நான் நன்றி. என்று கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மகாலட்சுமி.