ரஷ்யாவை ஆதரிப்பதால் ஆத்திரம்..இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா

பல ஆண்டுகளாக இந்தியாவின் உற்ற நண்பனாக ரஷ்யா இருந்து வருகிறது. சமீப காலமாகதான், அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. அதற்கு முன்பு வரையில், பாகிஸ்தானின் பக்கம் சாய்ந்து கொண்டு, இந்தியாவுக்கு அமெரிக்கா பல தொல்லைகளை கொடுத்து வந்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. ஐநா.வில் ரஷ்யாவை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றி வருகின்றன. இது தொடர்பாக ஐநா.வில் இதுவரை நடந்துள்ள 3 வாக்கெடுப்புகளிலும் இந்தியா பங்கேற்கவில்லை. ரஷ்யா, உக்ரைன் என எந்த நாடுகளுக்கும் ஆதரவாக நிற்காமல் நடுநிலை வகிக்கிறது.

இந்தியாவின் இந்த செயல், அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை அளித்துள்ளது. இந்தியாவின் இந்த நடுநிலையை, ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைபாடாகவே அமெரிக்கா பார்க்கிறது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபர் பைடன்  அமைதி காத்தாலும், அந்நாட்டு எம்பி.க்கள் அவரை கொம்பு சீவி விடுகின்றனர். இந்தியா ஒன்று அமெரிக்காவின் பக்கம் நிற்க வேண்டும் அல்லது ரஷ்யாவின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதனால், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து விலகி, அதற்கு எதிரான உலக நாடுகளுடன் கைகோர்த்து நிற்கும்படி இந்தியாவுக்கு பைடன் நிர்வாகம் வெளிப்படையாகவே நிர்பந்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. மேலும், இந்தியாவை தன் பக்கம் நிற்க வைப்பதற்கான நிர்பந்த வியூகத்தையும் பைடன் நிர்வாகம் எடுத்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியாவை போலவே, ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்கெடுப்பில் பங்கேற்காத மற்ற நாடுகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.