உலக நாடுகள் நடுநடுக்கம்: ரஷ்ய படைகள் முரட்டுத் தாக்குதல்
ராணுவ தளங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை படிப்படியாக தாக்குதல் நடத்தி அழித்து விட்ட ரஷ்ய படைகள், உக்ரைனின் பிரமாண்ட அணுமின் நிலையத்தின் மீது முரட்டுத்தனமான தாக்குதல் நடத்தி உள்ளது. ஐரோப்பா கண்டத்தையே நிர்மூலமாக்கும் இந்த விபரீத தாக்குதால், உலக நாடுகள் நடுங்கி போயுள்ளன.இதுவரை எந்த நாடும், தனது எதிரி நாட்டின் மீதான போரில் அணு மின் நிலையங்கள் மீது கை வைத்ததில்லை. போர் இலக்காக அணு மின் நிலையங்கள் இருக்கக் கூடாது என்ற எச்சரிக்கையை அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன. ஆனால், ரஷ்யா அந்த ஆபத்தான உத்தரவையும் உக்ரைனில் மீறியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தில் ரஷ்ய வீரர்கள் நேற்று முன்தினம் இரவு விபரீத தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் ஐரோப்பா முழுவதும் அச்சம் தொற்றிக் கொண்டது. ஆனாலும் உக்ரைன் ராணுவத்தினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால், அணு உலைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இதுவும் அணு ஆயுத போருக்கு சமமான ஆபத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய விஷயம் என்கின்றனர் உக்ரைன் அணுசக்தி கட்டுப்பாட்டாளர்கள். உக்ரைனில் ஜாபோரிஜியா, செர்னோபிள் உள்ளிட்ட 4 அணுமின் நிலையங்களில் 15 அலை உலைகள் செயல்படுகின்றன. முன்னதாக, செர்னோபிள் பகுதியில் போர் நடந்த போது அங்குள்ள அணுமின் நிலையம் தாக்கப்படாமல் உக்ரைன் ராணுவம் பாதுகாத்தது.செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கடந்த 1986ம் ஆண்டிலும், ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டிலும் விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சு கசிந்தது. இதன் பாதிப்புகள் இன்றளவும் உள்ளன. கதிர்வீச்சு கசிவு தடுக்கப்படாத ஒன்றாக உள்ளது. அணுமின் நிலையங்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய என்பதற்காக சாட்சியாக செர்னோபிள், புகுஷிமா அணுமின் நிலையங்கள் இருந்து வருகின்றன.
இந்த விபத்துக்களை காட்டிலும், 10 மடங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியது ஜாபோரிஜியா அணுமின் நிலையம். எனவே, ரஷ்யாவின் தாக்குதலில் இந்த அணுமின் நிலையம் வெடித்திருந்தால், ஐரோப்பாவின் கதையே முடிந்திருக்கும். ஐரோப்பாவின் அழிவாக அமைந்திருக்கும். ஐரோப்பாவில் புல், பூண்டு கூட முளைக்காத நிலை ஏற்பட்டிருக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விபரீதத்தை விளக்கி உள்ளார். இந்தளவுக்கு அதிபர் புடின் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை என பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே சமயம், அணு மின் நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் உலக நாடுகள் கடும் அச்சமும் அடைந்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.