பொருளாதாரம் சீரான வளர்ச்சியை கண்டு வருகிறது – நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார்
நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் ஒரு செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். பொருளாதாரம் மீண்டு வருவது போதிய வலிமையுடன் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது;-
“இந்த விவகாரத்தை தனித்தனியாக பார்க்க வேண்டும். வேளாண்துறை சிறப்பாக செயல்பட்டது. எப்போதும் 3 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டு வருகிறது. உற்பத்தி துறையை எடுத்துக் கொண்டால், அதில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. அதற்கு கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, நுகர்வோர் மனதில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் காரணம் ஆகும்.
கொரோனாவால் நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நிச்சயற்ற நிலைமை இருக்கும்போது, மக்கள் செலவழிக்க மாட்டார்கள். எனவே, கொரோனா வலையில் இருந்து விடுபடும்போது, நுகர்வு தன்மை அதிகரிக்கும்.
கட்டுமானம், தொழில்துறை ஆகியவற்றை பொறுத்தவரை அரசு பொது மூலதன செலவை அதிகரித்து வருகிறது. அதனால், அத்துறைகளில் வருமானமும், நுகர்வும் உயர்ந்து வளர்ச்சி அதிகரிக்கும். கடந்த ஆண்டு உலக வர்த்தகம் 23 சதவீதம் வளர்ந்தது. அந்த வளர்ச்சி நீடிக்காமல் போகலாம். ஆனால் ஏற்றுமதி உயரும். சேவை துறையிலும் வளர்ச்சி காணப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், சீரான பொருளாதார வளர்ச்சியை காண முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க சகாப்தம் முடிந்து விட்டது. ஒமைக்ரானால் பாதிப்பு குறைவாகவே இருந்தது.
பிரதமர்-விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.72 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலமும் தேவையும், வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.