நேரடி பேச்சுவார்த்தை நடத்த புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு!!
ரஷியா, உக்ரைன் இடையிலான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படாத நிலையில், நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ரஷிய அதிபர் புதின் தன்னுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். புதின் தனது அருகில் அமர்ந்து பேசினால் கடித்து வைத்துவிடமாட்டேன் என்று கூறிய ஜெலன்ஸ்கி ஏன் அஞ்சுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். உக்ரைன் முழுவதையும் ரஷியா கைப்பற்றிவிட்டால் அடுத்து ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்காமல் ரஷியா போர் தொடுக்கும் என ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
தாங்கள் நேட்டோவில் இல்லை, அணு ஆயுதங்களும் தங்களிடம் இல்லை என்று கூறிய ஜெலன்ஸ்கி, ரஷியாவுக்கு தாங்கள் வேறு என்ன உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே உக்ரைனின் தலைநகர் கீவில் ரஷிய படைகளின் தாக்குதல் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. கீவ் நகர வீதிகளில் முன்னேறி சென்ற பீரங்கி டேங்கிகளை ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உக்ரைன் படையில் உள்ள தன்னார்வலர்களும் ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.போருக்கு இடையே ரஷியாவுக்கு எதிரான மேற்கு உலக நாடுகளின் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கனடா 35%வரியை விதித்துள்ளது. ஒப்பந்த விமானத்தில் கனடா சென்ற ரஷியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷியாவில் நடைபெற இருந்த பார்முலா 1 கார் பந்தய போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.