சருமத்திற்கு நலம் சேர்க்கும் ‘வைட்டமின் சி’!!!!
சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருட்களில் வைட்டமின் சி, 10 முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும். மேலும் அதன் பி.எச். அளவு 3.5-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
வைட்டமின் சி, உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நன்மை சேர்க்கக்கூடியது. சருமத்திற்கு தேவையான பராமரிப்பையும், ஊட்டச்சத்தையும் கொடுப்பதற்கு வைட்டமின் சி சிறந்த தேர்வாக அமையும்.
அழுக்கு, வெப்பம், நச்சுகள், மாசு போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் முன்கூட்டியே வயதான தோற்றத்தை அடைய நேரிடும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள் தோன்றும். மேலும் தோல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு, தேவையான பராமரிப்பையும் வழங்கக்கூடியது. வைட்டமின் சி, சரும சுருக்கங்களை மேம்படுத்துவதாக சில ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. தொடர்ந்து மூன்று மாதங்கள் பயன்படுத்தும்போது தோல் சுருக்கங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையும் அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தொடர்ந்து வைட்டமின் சி பயன்படுத்தி வந்தால் சரும தோற்றம் மேம்படும். சன்ஸ்கிரீனுடன் வைட்டமின் சியை சேர்த்து பயன்படுத்தும்போது, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் வைட்டமின் ஈ, பெரூலிக் அமிலம் போன்ற பிற பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினாலும் புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. வைட்டமின் சி கரும்புள்ளிகளைக் குறைக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வைட்டமின் சி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. முகப்பருவை போக்கவும் உதவுகிறது. வைட்டமின் சி உடன் ஒப்பிடும்போது, மற்ற தோல் பராமரிப்பு பொருட்கள் குறைவான நன்மைகளையே கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சருமத்தை பராமரிக்கும் தன்மை கொண்ட வைட்டமின் சி, திரவ வடிவில் கிடைக்கின்றன. பல தோல் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் வைட்டமின் சி சார்ந்த சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருட்களில் வைட்டமின் சி, 10 முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும். மேலும் அதன் பி.எச். அளவு 3.5-க்கும் குறைவாக இருக்க வேண்டும். இவை வைட்டமின் சி சீரம் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கின்றன. அதனை பயன்படுத்துவதற்கு முன்பு அது சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா? என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். முதலில் முகத்தை மென்மையான கிளென்சர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு வைட்டமின் சி சீரத்தை முகத்தில் தடவ வேண்டும். இரண்டு முதல் ஐந்து துளிகள் உபயோகித்தால் போதுமானது. அது உலர்ந்ததும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம். வெளியே செல்வதாக இருந்தால் சன்ஸ்கிரீனையும் தடவ வேண்டும்.
ஆரம்பத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு எந்த பாதிப்பையோ, ஒவ்வாமை பிரச்சினையையோ ஏற்படுத்தவில்லை என்றால் வழக்கமான சரும பராமரிப்பு பொருளோடு இதனையும் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தினாலே மாற்றத்தை உணரலாம்.
ஏதேனும் அசவுகரியம் அல்லது தோல் தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், வைட்டமின் சி சீரம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.