இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவது தொடர்பான பிரதமர் மோடி ஆலோசனை!!
உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நேட்டோ அமைப்பின் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அதன் மீது 9 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்கள் மூலம் தொடர்ந்து குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி தாக்கி வருவதால் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் சீர்குலைந்தன. தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.உக்ரைனின் தற்போதைய நிலவரம், உக்ரைனில் மீதமுள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தலைநகர் கிவ்வில் இந்திய மாணவர் ஒருவர் சுடப்பட்டது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.இதன்படி அமைச்சர் ஹர்தீப் பூரி ஹங்கேரியில் இருக்கிறார், விகே சிங் போலந்தில் உள்ள வெளியேற்றும் நடவடிக்கையை மேற்பார்வையிடுகிறார். ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவிலிருந்து வெளியேற்றும் முயற்சிகளை கவனித்துக்கொள்கிறார், அதே நேரத்தில் கிரண் ரிஜிஜு ஸ்லோவாக்கியாவில் உக்ரைனில் இருந்து நில எல்லைகள் வழியாக வந்த இந்தியர்களை வெளியேற்றுவதை நிர்வகிக்கிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.