உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்!
டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக அடுத்த 3 நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த திட்டத்தின் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. இதன்படி ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 10வது சிறப்பு விமானம் நேற்றிரவு புதுடெல்லி வந்தடைந்தது. 3 தமிழ்நாடு மாணவர்கள் உள்பட உள்பட 218 இந்தியர்கள் இருந்தனர்.
அவர்களை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் வரவேற்றார். விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சருடன் இணைந்து மாணவர்கள் பாரத் மாத்தாக்கி ஜே என்று முழக்கமிட்டனர். பின்னர் பேசிய அவர்; இந்திய மாணவர்களை மீட்டு வர பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் நம்பிக்கையோடும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் வலிமையோடும், நம்பிக்கையை தளர விடாமலும் இருக்க வேண்டும். மிக விரைவில் நீங்கள் மீட்கப்படுவீர்கள். விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
4 அமைச்சர்கள் அங்கு களத்தில் உள்ளனர் என தெரிவித்தார். இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 89 மாணவர்கள் உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர், புதுச்சேரியை சேர்ந்த மாணவி சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது துணை நிலை ஆளுநர் வரவேற்றார். ஒட்டுமொத்தமாக உக்ரைனில் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருவதாக ஒன்றிய அரசு மதிப்பிட்டுள்ளது. அதில் இதுவரை 12 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கீவ்வில் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.