இந்தியர்களை மீட்பதில் முறையான திட்டம் இல்லை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லி: உக்ரைனில் சூழ்நிலையை மதிப்பிட்டு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் முறையான திட்டம் தீட்டுவதை விட ஒன்றிய பாஜக அரசு தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மிகவும் அதிகமான ஆர்வம் காட்டுவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆதீர் ரஞ்சன் சௌத்திரி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக கூறியுள்ள அவர்; ஒன்றிய அரசு பொறுப்பை எளிதில் தட்டிக்கழித்துவிட்டு செல்ல முடியாது என தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதில் ஒன்றிய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததுடன் சட்டமன்றத்தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் இருந்ததாக ஆதீர் ரஞ்சன் சௌத்திரி குற்றம் சாட்டியுள்ளார். நாம் உளவுத்துறை, செயற்கைக்கோள், உக்ரைன் ஆகியவை மூலம் தகவல்கள் பெற்றும் ஒன்றிய அரசு ஒன்னும் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார். உக்ரைன் சூழ்நிலையை மதிப்பிடுவதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்துவிட்டது. இன்னும் அதிக தீவிர செயல்பாடுடன் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்புடன் திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் ஆதீர் ரஞ்சன் சௌத்திரி தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.