ஸ்ரீகாளஹஸ்தி-இன்று 1 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு!

காளஹஸ்தி : தென் கயிலாயமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தியில் மகா சிவராத்திரியையொட்டி மின்விளக்கு, தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தியில் ஐம்பூத தலங்களில் வாயு ஸ்தலமான சிவன் கோயில் உள்ளது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சுயம்புவாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதற்கு சாட்சியாக காளத்தீஸ்வரர் மூலவர் சன்னதியில் இரண்டு தீபங்கள் லிங்கத்தில் இருந்து வரும் மூச்சு காற்றினால் அசைந்து கொண்டு இருப்பதை இன்றும் நாம் கோயிலில் ஆதாரமாக காணலாம். இந்த கோயிலில் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கம். ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் 12வது நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

மேலும் ராஜேந்திர சோழர் ஆட்சி 13வது நூற்றாண்டு முடிவுக்கு வந்த பின்னர், விஜயநகர மன்னர்களான சாலுவ ராஜா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் இக்கோயிலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்ததாக தெரியவந்துள்ளது. ஸ்ரீ காளஹஸ்தி சரித்திரத்தை, தல புராணங்களில் தென்கயிலாயமாகவும், பாஸ்கர ஷேத்ரமாகவும், அகண்ட வில்வ வனம் என்றும், சத்வோமுக்தி ஷேத்திரம் என்றும், சிவானந்த நிலையம் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

இங்குள்ள சிவலிங்கத்தை  பூஜித்த சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் மோட்சத்தை அடைந்தன. அதனால் இந்த ஷேத்திரத்திற்கு ஸ்ரீ சிலந்தி, காள- பாம்பு, ஹஸ்தி- யானை என்று ஸ்ரீ காளஹஸ்தி என்ற பெயர் வந்துள்ளது.இங்கு கண்ணப்பர்(திண்ணன்) என்ற பக்தர் சிவனுக்கு தன் கண்ணை கொடுத்து பக்த கண்ணப்பா என்று பெயர் பெற்றுள்ளார். இதற்காகவே இங்கு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கண்ணப்பருக்கு முதல் பூஜை நடந்து வருகின்றன.

அதன் பின்னரே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஜகன் மாதாவான பார்வதி தேவி, ஞானப்பிரசுனாம்பிகை தாயாராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தான் பெற்ற ஞானம் அனைத்தையும் சர்வ ஜீவராசிகளுக்கு கொடுப்பதாக பிரீத்தி. இதனால் அம்மனை தரிசனம் செய்தால் ஞானத்தை அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இவ்வளவு சிறப்பு மிக்க கோயிலில் இன்று(மார்ச் 1ம் தேதி) மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயில் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஒருங்கிணைந்து கோயிலை மின் விளக்குகளாலும், பல வண்ண மலர்களாலும் சிறப்பாக அலங்கரித்துள்ளனர்.

 நான்கு நுழைவுவாயில்களுக்கும்(கோபுரங்களுக்கு) பக்தர்கள் கண் கவரும் வகையில் வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மகாசிவராத்திரியன்று சுவாமி தரிசனம் செய்ய  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வரிசைகள் கோயிலுக்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்களின் வசதிக்காக வரிசைகளில் மின்விசிறிகளையும், குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்துள்ளனர். பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி வழக்கம் போல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.