குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு.. இந்தியர்களின் நிலைப்பாடு, மாணவர்கள் மீட்பு பணி குறித்து விளக்கம்..!!

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக உக்கிரமாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள், பணிபுரிய சென்றவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்க 4 ஒன்றிய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஆப்ரேஷன் கங்கா மூலம் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சந்தித்து பேசினார்.

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து குடியரசுத் தலைவரிடம் பிரதமர் விளங்கியதாக கூறப்படுகிறது. தூதரகம் வாயிலாக உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களுக்கு எவ்வித உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும் விளக்கினார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை; அதிலுள்ள சிக்கல்கள் பற்றி பிரதமர் மோடி விரிவாக எடுத்துரைத்துள்ளார். உக்ரைனுக்கு இந்தியா நிவாரணப் பொருட்கள் அனுப்ப உள்ள நிலையில் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான முறையில் மருந்து உள்ளிட்ட உதவிகளை வழங்குவது பற்றியும் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே கீவ் நகரில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ உடனே வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.