‘மிரியா’வை அழித்த ரஷ்ய ராணுவம். மக்கள் வேதனை!!!
அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை தடுக்க, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 24ம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் 4வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ரஷியாவுடனான போரில் உக்ரைன் பொதுமக்கள் 352 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.ரஷியா தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷியா குண்டு வீசி அழித்துவிட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மிரியா என்று பெயரிடப்பட்டுள்ள உலகத்திலேயே மிகப்பெரிய விமானமான ஆன்டனவ் -AN -225 உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள விமான பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் எஞ்சினில் ஏற்பட்டு இருந்த பழுதினை நீக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று விமான தளத்திற்கு வந்த ரஷிய படைகள், உக்ரைனின் பெருமைகளில் ஒன்று என்று அறியப்பட்ட ஆன்டனவ் -AN -225 விமானத்தின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும் இதில் மிரியா விமானம் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
ரஷிய படைகளின் தாக்குதலில் சீர்குலைந்த உலகின் மிகப்பெரிய விமானம் விரைவில் மீண்டும் கட்டி எழுப்பப்படும் என்றும் உக்ரைன் விமானத்துறை தெரிவித்துள்ளது. ஆன்டனவ் -AN -225 விமானம் 25,500 கோடி ரூபாய் செலவில் 5 ஆண்டுகளில் மீட்டு உருவாக்கம் செய்யப்படும் என்றும் உக்ரைன் விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.