கொரோனா நிபந்தனைகளில் தளர்வுகள்; கேரள சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்று முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஒன்று, இரண்டாவது அலையின் போதும் தொற்றின் பாதிப்பு உச்சத்தை தொட்டது. 3வது அலையின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3வது அலையிலும் கேரளாவில் நோய் பரவல் மிக உச்சத்தில் தான் இருந்தது. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.
நோய் பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மற்ற பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இது தவிர ஓட்டல்கள், கிளப்புகள், அரங்குகளில் நடைபெறும் திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நோய் பரவல் குறைந்து வருகிறது. அதைத் தொடர்ந்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், விடுதிகள், கிளப்புகள், அரங்கங்களில் முழு கொள்ளளவுக்கு ஆட்களை அனுமதிக்கலாம். பொது நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 1,500 பேர் வரை கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.