உக்ரைன் தலைநகரை சூழ்ந்தது ரஷ்ய ராணுவம் பேச்சு நடத்த குழுவை அனுப்ப தயார் – புடின் அறிவிப்பு

மாஸ்கோ:உக்ரைனின் ராணுவ தளங்கள், நகரங்களை வான்வழி தாக்குதல் வாயிலாக அழித்து வரும் ரஷ்ய படையினர், தலைநகர் கீவை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், ”உக்ரைனுடன் பேச்சு நடத்த குழுவை அனுப்ப தயார்,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, நேற்று இரண்டாவது நாளாக தாக்குதல்களை தொடர்ந்தது. அச்சம்தலைநகர் கீவில், அதிகாலை முதலே குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்க துவங்கியதாக, உக்ரைன் மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.’
பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்’ என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் முழுதும் உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

கீவ் நகரை சுற்றி ரஷ்ய உளவாளிகளும், நாச வேலைகளில் ஈடுபடுவோரும் அதிக எண்ணிக்கையில் தென்படுவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.’நகரங்களை அழிப்பது எங்கள் நோக்கமல்ல’ என, ரஷ்யா தெரிவித்தாலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேற்று ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
தலைநகர் கீவை கைப்பற்ற முயற்சி செய்த ரஷ்ய படையினருடன், இவான்கிவ் என்ற இடத்தில் உக்ரைன் ராணுவத்தினர் நேற்று கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த இடம் கீவ் நகரில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ளது. ஆனாலும், ரஷ்ய படைகள் கீவ் நகரை நெருங்கி விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கிழக்கு ஐரோப்பிய எல்லையில், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் படை தயார் நிலையில் உள்ளதாகவும், அதற்கு வலுசேர்க்க, கூடுதலான அமெரிக்க படையினர் ஜெர்மனியில் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துஉள்ளார்.
ஆனாலும், உலக நாடுகளின் மவுனம், உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கியை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.