கசப்பான பாகற்காயின் ‘இனி’ப்பான தகவல்கள்!!!
பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். பாகற்காயில் மிதிபாகல், கொடி பாகல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் ஒரே மாதிரி பலன்கள் தருகின்றன. பாகற்காய் வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்துவிடும். குடல் புழுக்களை நீங்க வைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.கல்லீரல், கண்நோய், பக்கவாதம் ஆகிய நோய்களைக் கட்டுக்குள் வைக்கும்.தினமும் பாகற்காய் சாற்றோடு, சிறிது எலுமிச்சம்பழச்சாறு கலந்து அருந்தி வர, ரத்தம் சுத்தமாகும்.சொறி, சிரங்கு இருந்தால் ஆறிவிடும்.பாகற்காய் சாறு, தேன் சிறிது கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, ரத்த சோகை, காச நோய் கட்டுக்குள் வரும். நிவாரணம் கிடைக்கும்.பாகற்காய் சாற்றுடன் சிறிது வெந்தயம் சேர்த்து சாப்பிட்டுவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.இதை வில்லைகளாக நறுக்கி, காய வைத்துப் பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு பெருமளவு கட்டுப்படும்.
பாகற்காய் கசப்பு சுவையாக இருப்பதால், அதை சுவையாக சமைக்க சில டிப்ஸ்…
பொரியல் கூட்டு போன்றவற்றில் தேங்காய்த்துருவல், கேரட் துருவல், வெல்லம் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவை கூடும்.பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி பிசிறி சற்று நேரத்தில் எடுத்து பிழிந்தால் கசப்பு சுவை போய்விடும். பிறகு சமைக்கலாம்.நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து ஊற வைத்து, காய வைத்தால் சுவையான பாகற்காய் வற்றல் தயார்.சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது கடலை மாவு, அரிசி மாவு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துப் பிசைந்து, போண்டாவோ, பக்கோடாவோ செய்யலாம். மற்ற ஊறுகாய்கள் செய்வது போன்றே, பாகற்காயிலும் ஊறுகாய் செய்யலாம். பல மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை விதவிதமாகச் சமைத்து சாப்பிட்டால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.