டிரம்ப் மீது பாலியல் வழக்கு டி.என்.ஏ., கோரும் பெண்

நியூயார்க்:அமெரிக்கா, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பாலியல் வழக்கு தொடர்ந்த ஜீன் கரோல் என்ற பெண், டிரம்பின் டி.என்.ஏ., மாதிரியை கோரி உள்ளார்.
அமெரிக்காவில், 2019ம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தில், ஜீன் கரோல் என்பவர், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். அதில், 1990களில், பல்பொருள் அங்காடியில் வைத்து, டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இது, அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பின், இதற்கு பதிலளித்து வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜீன் கரோலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதையடுத்து, டிரம்பிற்கு எதிராக, ஜீன் கரோல் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இது, மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த விசாரணையில் ஆஜரான ஜீன் கரோலின் வழக்கறிஞர் ராபர்டா கப்லான் கூறுகையில், ‘ஜீன் கரோலுக்கு, டொனால்டு டிரம்பின், டி.என்.ஏ., எனப்படும் மரபணு மாதிரி மட்டும் தான் வேண்டும்; டிரம்பை விசாரிக்க வேண்டாம்’ என்றார்.பின், செய்தியாளர்களிடம் பேசிய கப்லான், “டிரம்பிடம் விசாரணை நடந்தால், வழக்கு நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கப்படும்,” என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.