நெதர்லாந்தில் பொதுமக்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்த மர்ம நபர்
நெதர்லாந்து நாட்டு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மத்திய பகுதியில் உள்ள ஒரு கடையில் மர்ம நபர் துப்பாக்கியுடன் திடீரென புகுந்தார். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கடையில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். ஆனால் சிலரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மர்ம நபர் பிடித்து வைத்த பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே இருக்கும்படியும், ஜன்னல்களை மூடும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் போலீசார் கடைக்குள் புகுந்து பிணைக்கைதிகளை ஒவ்வொருவராக மீட்டனர். பல மணி நேரத்துக்கு பிறகு மர்ம நபர் கடையில் இருந்து வெளியே வந்து சரண் அடைவதாக சாலையில் படுத்துக் கொண்டார். அவரிடம் ஏதாவது வெடி பொருள் இருக்கிறதா? என்பது குறித்து ஆராய ரோபோ அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பின்னர் மர்ம நபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். மர்ம நபர் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பொது மக்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கடையில் துப்பாக்கிசூடு சத்தங்கள் கேட்டதாக அப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர். போலீசார் கூறும்போது, ‘கடைசி பிணைக்கைதி வரை பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.