துபாயின் புதிய அடையாளம்: வண்ணமயமான லேசர் ஒளிக்காட்சிகளுடன் எதிர்கால அருங்காட்சியகம்
துபாயின் புதிய அடையாளமாக விளங்கும் எதிர்கால அருங்காட்சியத்தின் கோலாகல திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இதனை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார். துபாயின் புதிய அடையாளமாக விளங்கும் எதிர்கால அருங்காட்சியக கட்டிடம் 255 அடி உயரம் கொண்டதாகும். கோள வடிவிலான வித்தியாசமான அமைப்பில் இந்த கட்டிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிக அழகிய 14 அருங்காட்சியகங்கள் பட்டியலில் எதிர்கால அருங்காட்சியகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிப்புறத்தில் அரபி வட்டெழுத்துக்களுடன் கலைநேர்த்தியுடன் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் மொத்தம் 7 தளங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 5 தளங்களில் பார்வையாளர்களை மிரமிப்பூட்டும் பல்வேறு காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளது. இந்த எதிர்கால அருங்காட்சியகத்தை முழுவதுமாக பார்வையிட 2 முதல் 3 மணி நேரம் பிடிக்கிறது.
அருங்காட்சியகத்தில் 2071-ம் ஆண்டை நோக்கிய விண்வெளி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல், சுகாதாரம், வாழ்வியல் நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன. உள்ளே நுழைந்தால் சினிமா செட்டுக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக ‘நியூ மூன்’ அதாவது அமாவாசை என்ற தலைப்பில் உள்ள காட்சியமைப்பு நிலவை எப்படி முழு கிரகத்துக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றமுடியும் என்பதை காட்டுவதாக உள்ளது. அதேபோல் பூமியில் இருந்து 600 கி.மீ உயரத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அதனை தத்ரூபமாக அங்குள்ள ஒரு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.