உக்ரைன் விவகாரத்தில் திருப்பம்; ரஷிய அதிபர் புதின் – ஜோ பைடன் சந்திப்பு!
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.இப்போதைய நிலவரப்படி, உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதை முன்மொழிவதாகவும், அதற்கான இடத்தை ரஷ்யாவே தேர்வு செய்யட்டும் என்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.இந்த நிலையில், இன்னும் காலம் கடந்து போகவில்லை, ரஷியா போரை தவிர்த்துவிட்டு அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.இதனையடுத்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்துள்ளார் என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. விரைவில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வெளியுறவு மந்திரி லேவ்ரோவ் மற்றும் செயலாளர் பிளிங்கன் ஆகியோர் இந்த வாரம் ஐரோப்பா செல்ல உள்ளனர். அதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்.ஆனால், இந்த சந்திப்பு நிகழ வேண்டுமானால், உக்ரைன் மீது போரை தவிர்க்க ரஷியா ஒப்புக்கொள்ள வேண்டும். இதனை விடுத்து, ரஷியா போரை தொடங்கினால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். அமெரிக்கா எப்போதும் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உக்ரைன் மீது விரைவில் தாக்குதல் நடத்த ரஷியா முழுவீச்சில் தயாராக உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் விவகாரம் தொடர்பாக புதினுடன் ஒரே நாளில் 2 முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.மேலும் அவர் அமெரிக்க அதிபர் பைடன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்நிலையில், அவருடைய முயற்சியின் பலனாக இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு நிகழ உள்ளது.இந்நிலையில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து மாணவர்கள், குடிமக்கள் நாடு திரும்ப வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.