‘கேட்’ தேர்வுக்கு எதிரான மனு – சுப்ரீம் கோர்ட்டில் அவசர விசாரணை…
சத்தீஷ்கார் மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் தந்தே, டெல்லியைச் சேர்ந்த சச்சின் தன்வர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.அதில், நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் ‘கேட் 2022′ தேர்வை நடத்தினால் அது மேலும் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசும், கரக்பூர் ஐ.ஐ.டி.யும் கருத்தில்கொள்ளவில்லை. மேலும், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களும், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்று பெறாதவர்களும் இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறியில்லாமல் கொரோனா பாதித்துள்ள மாணவர்களை கண்டறிவது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படவில்லை. எனவே இந்த பொதுநல மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை, கேட் 2022 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் வக்கீல் பல்லவ் மோங்கியா ஆஜராகி, பிப்ரவரி 5-ந் தேதி கேட் தேர்வு நடைபெற உள்ளது. 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர். எனவே, கேட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.அவரின் முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், அவசர விசாரணைக்கு வழக்கை பட்டியலிட ஒப்புதல் அளித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.