நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் “மெர்சல் ” காட்ட தயாராகும் விஜய்!!!!!!
தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, பாமக,நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிட்டனர். நடிகர் விஜய் நேரடியாக வேட்பாளர்களுக்கு பிரச்சாரமோ அல்லது முறையான ஆதரவு அறிக்கையோ வெளியிடாத நிலையில், அவர் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்க கொடியுடன் நிர்வாகிகள் வேட்புமனு மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தலின் முடிவில் பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் போட்டியிட்ட 169 பேரில் 129 பேர் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியானது. அவ்வப்போது அரசியல் புயலில் சிக்கி வந்த விஜய்யின் இந்த திடீர் நகர்வு மூத்த கட்சிகளையே வியப்பில் ஆழ்த்தியது. இருந்தும் விஜய் சம்மதத்துடன் தான் இவர்கள் அனைவரும் போட்டியிட்டனரா? என்ற கேள்வியும் எழுந்தது.
நடிகர் விஜய் இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பனையூரில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, அவர்களோடு ஒரு ஓரமாக அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதையடுத்து விஜயின் சம்மதத்துடன் தான் தேர்தலில் அவரது இயக்கத்தினர் போட்டியிட்டது உறுதியானதோடு, வருங்காலத்தில் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் ஆருடங்கள் வெளிவந்தன. விஜய் மக்கள் இயக்கம் போட்டி இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் பெற்ற வெற்றியை தற்போது கொண்டாடி வரும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தற்போது மாநகராட்சி பேரூராட்சி நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் காண தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆலோசனை கூட்டம்: இதுகுறித்து சென்னை பனையூரில் உள்ள வீட்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாமக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ள நிலையில் கூடுதலாக விஜய் மக்கள் இயக்கமும் களத்தில் குதித்துள்ளது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
தேர்தலில் நேரடியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டாலும் கடந்த தேர்தலில் போல் விஜய் அவர்களுக்கு வாய்ஸ் கொடுக்காமல் இருப்பாரா அல்லது அறிக்கை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ களத்தில் குதித்து தனது வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பாரா என்பதே தற்போதைய கேள்வி. இருந்தும் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகிகள் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டு விஜய்யின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக நம்மிடம் பேசிய மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் சையது.