என் உயிர் பிரியும் முன் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி நடக்கும்…. -கோவை பெரியநாயகி.
எத்தனை தலைவர்கள் தோன்றினாலும், ஒரு ஒப்பற்ற உலகத் தலைவராக எங்களில் தெய்வப்பிறவி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், உலகெங்கும் கோடான கோடி மக்களின் இதயத்தில், இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது எவருக்குமே கிடைத்திடாத இடம் என்று உணர்ச்சி பூர்வமாக பேசத் தொடங்கினார் கோவையின் வசித்துவரும் பெரியநாயகி.

இவர் தேவகோட்டை வெள்ள ஊரணி என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடன் ஒரு சகோதரி 2 சகோதரர்கள் உள்ளனர் இவர்களுடைய தந்தையார் கிருஷ்ணன் 1960ஆம் ஆண்டில் அந்த பகுதியில் சைக்கிள் ஸ்டாண்ட் கேரியர் செய்யும் பட்டறை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் சுமார் 32 பேர் வேலையாட்கள் பணிபுரிந்துள்ளனர். கிருஷ்ணன் அவர்களுக்கு ஐயர், வெள்ளாளர் என 4 பேர் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து வந்துள்ளனர். பெரியநாயகி இவருடைய தாயார் காளியம்மாள் அவருடைய பங்குக்கு 20 பசுமாடுகளை வைத்து ஒரு பண்ணையை நடத்தி வந்துள்ளார்.
இவர்களது வீட்டிற்கு உதவி என்று கேட்டு வருவோர் எல்லோருக்கும் முன்நின்று தாராளமாக செய்து வந்துள்ளனர்.
தேவகோட்டையில் அருணா, லட்சுமி, சரஸ்வதி, போன்ற திரையரங்குகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் வெளியாகும்போது, இவர்கள் குடும்பத்திற்கு முதல் டிக்கெட் கிடைக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சியை பெற்று வந்துள்ளனர்.
அப்படி எம்ஜிஆர் மீது மிகப்பெரிய பற்று வைத்து, குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை இதய தெய்வமாக பூஜித்து வந்துள்ளனர்.
ஒரு காலகட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்காக எம்ஜிஆர் தேவகோட்டை வரும்போது, யாருக்கும் தெரியாமல் அங்கு உள்ள கட்சிக்காரர் அங்குசாமி வீட்டிற்கு வந்து அமர்ந்து விடுகிறார். இந்த செய்தி அறிந்து ஊருசனம் எல்லாம் கூடி விட்டது.
தனது தோழிகளுடன் தண்ணீர் பிடிக்க சென்ற பெரியநாயகி காதுகளுக்கும் செய்தி வந்தடைகின்றன.. அவரை பார்ப்பதற்காக உடனடியாக ஓடோடி வந்தார். ஆனால், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அங்கிருந்து கிளம்பி விட்டார் என்ற செய்தி மட்டும் கேட்டு மனம் உருகி நின்றார்.

அவரைப் பார்க்க முடியவில்லை என்று அதை நினைத்து நினைத்து தினமும் தூங்கும் போதெல்லாம் அழுது கொண்டே இருந்திருக்கிறார். எப்படியும் ஒரு தடவை வந்து அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை தன் மனதில் கொண்டவர். அதேபோல் அவருடைய ஆசையும் சற்று காலதாமதம் ஆனாலும் நிறைவேறியது. ஆம் அந்த நாள், நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம். இதைக் கேள்விப்பட்ட பெரியநாயகி. காலை முதல் மாலை வரை
சாப்பிடாமல் கூட, அந்த இடத்திலேயே வட்டமிட்டு இருந்துள்ளார். அதன் பயனாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பேசும் மேடை அருகிலே இவருக்கு இடம் கிடைத்தது. மிகப் பக்கத்தில் பார்த்த உற்சாகம் இவரை வானில் பறக்க வைத்ததுபோல் சந்தோஷமடைந்து உள்ளார். இதேபோல் தேவகோட்டைக்கு
எம்ஜிஆர் அவர்கள் வரும்போதெல்லாம் ஓடி சென்று பார்த்திருக்கிறார். ஆனால் அந்தத் தருணத்தில் இவருக்கு நிறைவேறாத ஆசையும் ஒன்று இருந்திருக்கிறது. இன்றும் அதை நினைவில் தங்க வைத்து வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார். அதாவது இவருடைய இதய தெய்வமாக பூஜிக்கும் எம்ஜியாருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்காதது, பல கோடி சொத்து சுகத்தை இழந்ததைப் போல் வருத்தம் கொண்டுள்ளார்.
பெரியநாயகி அப்போதைய தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்திற்காக முன்நின்று வீதி வீதியாக சென்று வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரித்து பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்ற இடமெல்லாம் வெற்றி கிடைத்தது என்பதை மண் மனம் வாசனை மாறாமல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

எம்ஜிஆர் என்ற பெயரைத்தான் நான் சின்ன வயதில் இருந்து இன்று வரை என் நெஞ்சில் சுமக்கின்றேன்.. என் இதய தெய்வம் அவர்தான் எனக்கு எல்லாமே.. அவர் இல்லை என்றால் நான் இல்லை ஆம் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அதனால்தான் நான் இன்று நடமாடுகிறேன்.. சோகமாக சில நேரங்களில் இருக்கும் போது என் மனதில் இதய தெய்வத்தோடு பேசியபடி தூங்குவேன் என்றார்.
எங்களுக்கு எல்லையில்லா மிகப்பெரிய சந்தோஷம் ஒன்று இருக்கு என்றால் என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உலக மக்கள் மனங்களிலும் பெரிய இடத்தில் உயர்ந்து நிற்கிறார் மாமனிதர். அந்த மகான். ஆகையால்தான் கடல்தாண்டி வாழுகின்ற எண்ணற்ற விசுவாசிகளும் அவர் பெயரை உச்சரித்து போற்றி விழா எடுத்தும் வருகின்றனர். வெளிநாட்டில் இருக்கும் விசுவாசிகள் பலரும் என்னை தொலைபேசியில் அழைத்து பேசும்போதெல்லாம் கடல் தாண்டி வாழும் தாயே என்று அழைக்கும்போது, எனக்குள் பெருமையாக இருக்கும். தற்போது சிரமத்தில் வாழுகின்ற நாங்கள் வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் இந்திய அளவில் எங்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விழா நடந்தாலும் ஓடோடி சென்று விடுவேன்..
என்று ஒரு குழந்தைதனமாக தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்.
அவ்வப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விசுவாசிகள் ஒரு சிலர் பெரியநாயகிக்கு உதவி செய்தாலும் அவருடைய இந்த உண்மையான விசுவாசத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சிக்காரர்கள் உதவி செய்திட யாரும் முன்வரவில்லை என்பது மிக வருத்தமான விஷயமும் கூட..
சென்னை திருநின்றவூர், கலைவாணன் குடும்பத்தினர் கட்டிய இறைவன் எம்ஜிஆர் ஆலயத்தில் விழா நடக்கும் போதெல்லாம் அங்கு எம்ஜிஆர் அவர்களின் தேர் இழுத்து மகிழ்வார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அனைத்து நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ள தவறாமல் ரயிலுக்கு முன் பதிவு செய்து வைத்து விடுவார். அதுமட்டுமல்ல கோவை பெரிய நாயகியே தெரியாதவர்கள் யாரும் எம்ஜிஆர் விசுவாசிகளாக இருக்க முடியாது என அந்த அளவிற்கு இவர் பரிச்சயமானவர்.

தமிழ்மலர் மின்னிதழ்க்கு அவரைப் பேட்டி எடுத்தபோது….
உங்களுடைய ஆசை என்ன..? உங்களுக்கு என்ன வேண்டும்..? என்று பெரியநாயகி அம்மாவிடம் கேட்டோம். அதற்கு அந்த அம்மா என் உயிர் பிரியும் முன் தமிழகத்திற்கு மீண்டும் பொற்கால ஆட்சி தந்த எங்கள் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், எம்ஜிஆரின் ஆட்சி நடைபெற வேண்டும் அதை நான் பார்த்த பிறகுதான் என்னுடைய மனபாரம் குறையும், என் உயிர் பிரியும். அதுவே எனக்கு போதும். அதற்குப் பிறகு எல்லாம் என் இதய தெய்வம் பார்த்துக்கொள்வார் என்று கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தையும், ஆனந்தத்தையும் கலந்து தந்தார். ( பெரியநாயகி 9566758519 )
செய்தி: மூத்த பத்திரிகையாளர் சிரஞ்சீவி அனீஸ்.
