விஜயதசமியன்று முக்தியடைந்த ஷீர்டி சாயி பாபா…..!

விஜயதசமியன்று முக்தியடைந்த
ஷீர்டி சாயி பாபா…..!
ஷீர்டி சாயி பாபா….. 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய ஆன்மீத்துறவி ஆவார்.இக்கலியுகத்தில் அவதரித்த மஹான்கள் பலர்.அவர்களும் முதன்மையானவர் ஷீர்டி சாயிபாபா.அவர் நிகழ்த்திய லீலைகள்,அற்புதங்கள் எண்ணிலடங்காதவைகள்.பல பக்தர்களின் வாழ்வில் விடிவெள்ளியாய் ஒளிர்ந்து,இவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களிலிருந்து விமோசனம் வழங்கியவர் ஷீர்டி தாய் பாபா என இவரது அடியார்கள் ஆதாரபூர்வமாக பல சம்பவங்களே இதற்கு சாட்சி. ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பாபாவை நோக்கி விரதம் இருப்போர்கள் அரிய பல அற்புதங்களை கண்டதுடன் வெற்றிமிகுந்த வாழ்வையும் அடைந்துள்ளனர்.சாயி பக்தியின் சக்தியை அறிந்தவர்கள் அவரை சிவனின் அவதாரமென்றும்,
ஒரு சிலர் காக்கும் கடவுளாகிய விஷ்ணுவின்  அம்சமெனவும் கூறுகின்றனர். ஷாயியை யாராவது ஹிந்து என்றால் திருக்குர்ஆன் ஓதிக் காட்டுவார்,முஸ்லீம்கள் என்றால் சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவார்.ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையின் சின்னமாக வாழ்ந்தவர் பாபா. இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் பாபாவை முதன்மை மிகுந்தவர்.   இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான ஷீர்டிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித ஷீர்டி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.
பாபா…. செப்டம்பர் 28, 1838 அன்று இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அஹமத் நகர் மாவட்டதிலுள்ள “ஷீர்டடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு மகானாக சீரடி சாயி பாபா……

அவருக்குப் பதினாறு வயது நிரம்பிய தருணத்தில் , ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்டவர் சீரடி சாய் பாபா அவர்கள்.1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம்நாள் ஓர் விஜயதசமி அன்று இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிடினும், சீரடியில் அவர் வாழ்ந்து மறைந்த இடங்களை புனிதஸ்தலமாக எண்ணி தினந்தோறும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஷீர்டிக்கு வருகை தந்து கொண்டுதான் இருக்கின்றனர்.சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி, மற்றும் சுஃபி துறவி என பாபாவை பலரும் போற்றி இந்துக்களும்,இஸ்லாமியரும் 
புனித சாமியாராக இவரைப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்
கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது…..
ஒருமுறை நீதிமன்ற ஆணையர் அவரது வயதைக் கேட்டபோது லட்சக்கணக்கான வருடங்கள் என்று சாய் பாபா தெரிவித்திருந்தார். பக்தர்கள் பலர் திரட்டிய தகவல்களில் இருந்து சாய் பாபாவின் அவதார தினம் 1838 செப்டம்பர் 28 என தெரியவந்தது.
மராட்டிய மாநிலம் பாத்ரி கிராமத்தில் கங்கா பாவத்யா, தேவகிரியம்மா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். தீவிர சிவ பக்தர்களான அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை. ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. படகோட்டியான கங்கா பாவத்யா, தன் படகை பத்திரப்படுத்த ஆற்றங்கரைக்கு சென்று விட்டார். வீட்டில் தேவகிரியம்மா மட்டும் இருந்தார்.அப்போது, வயதான ஒருவர் வந்து கதவை தட்டினார். தேவகிரியம்மா கதவைத் திறந்து “என்ன வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், “மழை அதிகம் பெய்வதால் இன்றிரவு மட்டும் இங்கு தங்கிக் கொள்கிறேன்” என்றார். “சரி” என்று கூறிய தேவகிரியம்மா திண்ணையில் அவரை படுத்துக் கொள்ள அனுமதித்தார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத்தட்டி தேவகிரியம்மாவை எழுப்பிய அந்த முதியவர், “பசிக்கிறது, சாப்பிட ஏதாவது தாருங்கள்” என்றார். உடனே அவருக்கு தேவகிரியம்மா சாப்பாடு கொடுத்தார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டிய அந்த முதியவர், “எனக்கு கால்கள் வலிக்கிறது. சற்று பிடித்து விடு” என்றார். இதைக் கேட்டதும் தேவகிரியம்மா அதிர்ச்சி அடைந்தார். பணம் வாங்கிக் கொண்டு யாராவது அவருக்கு கால் பிடித்து விட வருவார்களா என்று தேடிப்பார்த்தார். யாரும் கிடைக்கவில்லை, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் தேவகிரியம்மா தவித்துக் கொண்டிருந்த போது, மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. இந்த முறை ஒரு பெண் வெளியில் நின்று கொண்டிருந்தார். அவள், “இந்த முதியவருக்கு நான் பணிவிடை செய்யட்டுமா” என்று கூறினார். மகிழ்ச்சி அடைந்த தேவகிரியம்மா, “சரி செய்யுங்கள்” என்று கூறி பணம் கொடுத்து விட்டு, வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.வெளியில் இருந்த முதியவரும், பெண்ணும் உண்மையில் 
பரமசிவனும், பார்வதியும் 
ஆவார்கள். அவர்கள் இருவரும் தேவகிரியம்மாவின் குறையை தீர்க்க முடிவு செய்தனர். அவர்கள் மீண்டும் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த தேவகிரியம்மாவுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை. வெளியில் பரமசிவனும், பார்வதியும் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தனர், மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தேவகிரியம்மா இறைவன், இறைவி முன்பு விழுந்து வணங்கினார்.அவரை ஆசீர்வதித்த இறைவன், “உனக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும், மூன்றாவது குழந்தையாக நானே உன் வயிற்றில் பிறப்பேன்” என்று ஆசி கூறி மறைந்தனர். தேவகிரியம்மாவுக்கு நடப்பது கனவு போல இருந்தது. கங்கா பாவத்யா வீடு திரும்பியதும் நடந்ததை கூறினார். ஆனால் கங்கா பாவத்யா அதை நம்பவில்லை. சில தினங்களில் தேவகிரியம்மா கர்ப்பமடைந்தார், முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஓராண்டு கழித்து பெண் குழந்தை ஒன்றை தேவகிரியம்மா பெற்றெடுத்தார். மூன்றாவது முறை தேவகிரியம்மா கர்ப்பம் தரித்த போது கங்கா பாவத்யாவுக்கு ஈசன் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
தேவகிரியம்மாவுக்கு காட்சி கொடுத்த ஈசன் தனக்கும் காட்சி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். தேவகிரியம்மா அவரைப்பின் தொடர்ந்தார். தம்பதியர் இருவரும் காடு – மேடுகளில் அலைந்து திரிந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவகிரியம்மாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் அதை கண்டு கொள்ளாமல் கங்கா பாவத்யா சென்று கொண்டிருந்தார். இதனால் தேவகிரியம்மா அந்த குழந்தையை அரசமர இலைகளில் சுற்றி காட்டுக்குள்ளேயே போட்டு விட்டு கணவரை பின் தொடர்ந்து சென்று விட்டார்.
பின்னர் முஸ்லிம் பக்கீர் ஒருவர் அந்த குழந்தையை கண்டெடுத்து மன்வாத் கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு கொண்டு சென்றார். அவர் பாலபாபாவை 4 ஆண்டுகள் வளர்த்தார். பிறகு அவர் அந்த சிறுவனை வேங்குசாவிடம் ஒப்படைத்தார்.சிறு வயலிலேயே பாபா இறைவனின் அருட்கடாட்சம் நிறைந்தவராக காணப்பட்டார்.பதினாறு வயதில் மோனநிலையை அடைந்தார் பாபா.உடல் நலிவுற்ற பல வியாதியஸ்தர்களை தன் ஆன்மீக இறை துணையுடன் குணப்படுத்தினார். பலரது வாழ்வில் பசியைப் போக்கி நலம் காண உதவினார்.பாபா ஆற்றிய அற்புதங்கள் அளவில்லாதது.இன்று பெரும்பாலானவர்கள் ஜோதிடத்தை நம்பியே வாழ்கிறார்கள். செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஜோதிடரின்ஆலோசனையைக் கேட்டே செய்கிறார்கள். ஆனால் பாபாவை நம்பியிருக்கும்போது, நமக்கு வரும் தீங்குகள் காணாமல் போகும் என்பதை அவரின் பக்தர்கள் அறிவார்கள். ஒருமுறை ‘பாபு சாஹேப்பை பாம்பு தீண்டும்’ என்று பிரபல ஜோதிடரான நானா சாஹேப் சொன்னபோதும், பாபு பாபாவை நம்பி இருந்து ஆபத்து நீங்கினார் என்பதை நாம் அறிவோம். சாயிநாதனின் பக்தர்கள் ஒருபோதும் கிரகங்களையும் காலங்களையும் கண்டு அஞ்சவேண்டியதேயில்லை என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று சாவித்ரிபாய் வாழ்வில் நிகழ்ந்தது.பாந்த்ராவில் வாழ்ந்த தெண்டுல்கர் என்பவரின் மனைவி சாவித்ரி பாயி, பாபாவின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்ட பெண்மணி. ஆனால் அவரின் மகனான பாபு தெண்டுல்கருக்கு அத்தனை நம்பிக்கையில்லை. பாபு தெண்டுல்கர் மருத்துவராகும் பொருட்டு அதற்கான பரீட்சைக்குத் தன்னைத் தயார்
படுத்திக்கொண்டிருந்தான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும் அவனுக்குத் தன் திறமையின் மீதே சந்தேகம் ஏற்பட்டது.பாபுவுக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. உள்ளூரில் பெயர்பெற்ற ஜோதிடர்களை அழைத்து ‘தான் எழுதும் தேர்வு எப்படியிருக்கும்’ என்பது குறித்து கேட்டான். சொல்லிவைத்தாற்போல அனைவரும் ஒன்றுபோல பலன் சொன்னார்கள். ‘இந்த ஆண்டு கிரக நிலைகள் சரியில்லை’ என்றும் ‘அடுத்த
ஆண்டு மிகவும் சாதகமாக இருப்பதால், இந்த ஆண்டு தேர்வு எழுதாமல் இருப்பது நல்லது’ என்றும் தெரிவித்தனர்.
பாபு, ஓர் ஆண்டு வீணாகக் கழிப்பது குறித்து கவலைகொண்டார். மகனின் இந்தத் தவிப்பைக் கண்ட சாவித்ரி பாய், ஷீர்டிக்குப் பயணமானார். சாயிநாதனைக் கண்டு அவர் பாதங்களில்
விழுந்து வணங்கினார். அவருக்கு பிரசாதம் வழங்கிய சாயி, ‘அவள் வேண்டுவது என்ன’ என்று கேட்டார். உடனே சாவித்ரி தன் மனக்குறையை இறக்கிவைத்தார்.பாபா தன் கைகளை உயர்த்தி அவளை ஆசீர்வதித்து, “என்னை நம்புகிறவர்கள் ஏன் ஜோதிடத்தை நம்ப வேண்டும். ஜாதகம், கைரேகைக்காரர்கள் ஆகியோர் சொல்லும் ஆருடங்களைத் தூக்கியெறிந்துவிட்டு உன் மகனை என்மேல் நம்பிக்கை கொள்ளச் சொல். இந்த ஆண்டே தேர்வினை எழுதச் சொல். என்னை நம்பியவர்கள் ஏமாற்றமடைவதில்லை. நிச்சயம் அவன் தேர்வில் வெற்றிபெறுவான். அதற்காக அவனைக் கடுமையாகப் படிக்கச் சொல்” என்று சொல்லி சமாதானத்தோடு அவளை அனுப்பினார் பாபா.நம்பிக்கை, பக்தியை ஒருபோதும் சாயி வீணாக்குவதில்லை!சாவித்ரி, பாபாவின் செய்தியை தன் மகனுக்குச் சொன்னார். அதைக் கேட்டதும் கொஞ்சம் மனம் தெளிவடைந்த பாபு, தேர்வுக்காகக் கடுமையாகத் தயாராகி வெற்றிகரமாகத் தேர்வினை எழுதியும் முடித்தான். ஆனாலும், அவனுக்குள் அவநம்பிக்கை முழுமையாக
நீங்கிவிடவில்லை. ‘முடிவுகள் தனக்கு சாதகமாக இருக்காது’ என்று நம்பினான். அதனால், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் நடைபெறும் வாய்மொழித் தேர்விற்காக அவன் பயிற்சி எடுக்கவேயில்லை. ஆனால் தேர்வு அதிகாரியோ, அவன் தேர்வில் வெற்றிபெற்ற செய்தியைச் சொல்லியனுப்பி நேர்முகத் தேர்வுக்கு ஆஜர் ஆகுமாறு தகவல் அனுப்பினார்.இவ்வாறு ஜாதி செய்த அற்புதங்கள் ஏராளம்.
இறைவன் இப்பூவுலகில் ஒரு சிலருக்கே இது போன்ற இறைநிலை வரங்களை வாரி வழங்குவார்.அவர்களில் மேன்மை நிறைந்த பாபா அவர்கள் ஓர் விஜயதசமி நந்நாளில் இறையுடன் கலந்தார்.இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இவ்வாறான நந்நாட்களில் முக்திப்பேறு கிடைக்கும் அற்புதம் நிகழும்.விஜயதசமி அன்று நவசக்திகளுடன் ஷீர்டி பாபாவையும் வழிபாடு செய்து எடுத்தப் பிறவியின் பயனை அடைவோமாக…!
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை

Leave a Reply

Your email address will not be published.