நீட் தேர்வு எழுத 4 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு.. பெற்றோர் வாக்குவாதம்..
100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தேர்வுக் கூடத்தை முற்றுகையிட்டு மாணவரை தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்க கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர்.
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது 2 மணிக்கு துவங்கும் தேர்வுக்கு 1:30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 4 நிமிடங்கள் தாமதமாக அதாவது 1:34 வந்த ஒரு மாணவர் தேர்வு மையத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனால் தேர்வு மையத்திற்கு வந்திருந்த அனைத்து பெற்றோர்களும் தேர்வுக் கூடத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Also read: நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை – முதல்வர் ஸ்டாலின் வேதனை!
4 நிமிடங்கள் தானே தாமதமாக வந்து உள்ளார், அவரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த வாக்குவாதம் தொடர்ந்ததால் தகவலறிந்த காவல்துறையினர் வந்து அவர்களும் தேர்வு மைய கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பரிந்துரை செய்தனர்.
ஆனால், காவல்துறையினர் பரிந்துரையையும் ஏற்க மறுத்த அதிகாரிகள் அந்த மாணவரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினர். வேறு வழி ஏதும் இன்றி அந்த மாணவர் கண்ணீருடன் வீடு திரும்பினார்.