கீழடி அகழாய்வு, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன என்றும், இதை யாராலும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது எனவும் தமிழக சட்டப்பேரவையில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.

‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற வாசகத்துடன் தொடங்கிய அந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது, தமிழினத்தின் பெருமையை பறைசாற்றும் அறிவிப்பாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று கூறினார். திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பேற்கிறதோ அப்போதெல்லாம், வள்ளுவர் கோட்டம் அமைத்தது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, தமிழை கணினி மொழியாக்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது, செம்மொழி மாநாடு நடத்திய என தமிழ் அரசை நடத்தியது தான் திமுக அரசு எனறு கூறினார்.

பண்டைய நாகரீகத்தினர் தமிழன் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன. இதை யாராலும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. வியக்க வைக்கும் செங்கல் கட்டுமானம், தங்க அணிகலன்கள், சிந்துவெளி நாகரீகத்தில் காணப்பட்ட காளைகள், கார்பன் ஆய்வின் முடிவின்படி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்ற இனமாக தமிழினம் விளங்கி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கீழடி, கொற்கை, உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கி.மு.ஆறாம் நூற்றாண்டிலே எழுதறிவு பெற்ற சங்க இலக்கிய சமூகம் என்று தெரிவித்தது கீழடி ஆய்வு. சூரியன், நிலவு, வெள்ளி முத்திரை காசு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அசோகர் காலத்துக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில்இருந்த நெல் மணிகளின் காலம், அமெரிக்க பீட்டா ஆய்வு மைத்தில் கார்பன் டேட்டிங்க சோதனையில் கி.மு. 1155 என்று கண்டுபிடிக்கப்படுள்ளது. கொற்கை,சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

கீழடியில் நாகரீகம் கி.மு 6 ஆம் நூற்றாண்டை சார்ந்தது. கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக கொற்கை ஒரு துறைமுகமாக செயல்பட்டுள்ளது. வெளிநாடுகளுடன் வணிக தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அகழ்வாய்வு பணிக்கு நிதிநிலை அறிக்கையில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Must Read : அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் க.பொன்முடி தகவல்

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழரின் பண்பாட்டை தேடி ஆய்வுகள் செய்யப்படும். அறிவியல் வழி நின்று இந்திய துணை கண்டத்தில் வரலாறு தமிழ் நிலபரப்பிலிருந்து தான் துவங்கி எழுதபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை முதலமைச்சர் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.