பேருந்தில் பிரசவ வலி.. காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்

கேரள மாநிலம் ஆன விலாசம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் வசித்து வரும் 21 வயதுடைய பெண் கடந்த ஜனவரி மாதம் கருவுற்றார். அந்த பெண் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். அவர் மருத்துவ பரிசோதனைக்காக தேனி மாவட்டம் கம்பம் நகருக்கு வருவது வழக்கம். தற்போது ஏழாவது மாதம் என்பதால், குமுளியிலிருந்து கம்பத்திற்கு பேருந்தில் மருத்துவ பரிசோதனைக்காக அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் வந்துள்ளனர். குமுளி மலைப்பாதையில் அந்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், விரைந்து செயல்பட்ட ஓட்டுநர் மற்றும் பேருந்து நடத்துநர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் லோயர் கேம்பில் பெண்ணை 108 ஆம்புலன்சில் வேகமாக ஏற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே வலி அதிகமானதால், 108 ஆம்புலன்சிலேயே, ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்துள்ளார். இந்த பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும்,சேயும் நலமாக உள்ளனர். பின் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்த பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தை 7ம் மாதத்திலேயே பிறந்ததால் மேல் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிக்கலான பிரசவம் பார்த்த 108 அவசர வாகன மருத்துவ உதவியாளர் ஆஜிப் அரபாத் மற்றும் விரைந்து வாகனத்தை செலுத்திய 108 அவசர வாகன ஓட்டுனர் பாண்டியனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.