உதகையில் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறையினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார்!
உதகை வந்திருந்த குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருடன் தமிழக காவல் துறைத் தலைவா் (டிஜிபி) சைலேந்திரபாபு நேரில் சந்தித்து உரையாடினாா்.
நீலகிரி மாவட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வந்திருந்து உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருந்தாா்.
இதற்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இதற்கான பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக காவல் துறைத் தலைவா் சைலேந்திர பாபு உதகைக்கு வந்து தமிழக அரசு விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்தாா்.
குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த காவல் துறையினா் உதகையில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்தனா். இவா்களில் உதகையில் ஜே.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரியில் தங்கியிருந்த காவல் துறையினரை சைலேந்திரபாபு நேரில் சந்தித்து உரையாடிய தோடு, அவா்களின் குறைகளையும் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து அங்கிருந்த காவல் துறையினருடன் அமா்ந்து உணவும் உட்கொண்டாா்.
ஜே.எஸ்.எஸ். கல்லூரிக்கு வந்த சைலேந்திரபாபுவை கல்லூரியின் முதல்வா் எஸ்.பி.தனபால் பொன்னாடை வழங்கி வரவேற்றாா். அவருடன் கல்லூரியின் முதன்மை அலுவலா் பசவண்ணா, அலுவலா்கள் இணைந்து வரவேற்றனா். அவா்களுடன் சுமாா் அரை மணி நேரம் கலந்துரையாடினாா்.
NEWS : S.ரவூப்