முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர், அமைச்சர்கள் பொறுப்பேற்ற மே 7ம் தேதியே நடைபெற்றது. அப்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்றது. தற்போது, கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, அமைச்சரவைக் கூட்டம் கூடி விவாதிப்பது வழக்கம். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அப்போது, 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், தமிழகத்தில் தொழில் தொடங்குவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், வேளாண் நிதி நிலை அறிக்கை ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்றும், தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கைக்குக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த மாதத்தின் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி: S. MD. RAWOOF

Leave a Reply

Your email address will not be published.