மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெருமழையால் 4 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மாயமானதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு
பெருமழையால் 4 பேர் பலி; 40 பேர் மாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெருமழையால் 4 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மாயமானதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் ஹொன்சார் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு, மழை கொட்டி தீர்த்தது. இதில், அம்மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாகவும், அதுதொடர்பான சம்பவங்களாலும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்; 40 பேர் மாயமாகியுள்ளனர். மேலும், 8 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனையடுத்து, ஹொன்சார் மாவட்டத்திற்கு மீட்புப்படை விரைந்து, மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே கிஷ்த்வார் மாவட்டத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், நீர்நிலைகளுக்கு அருகிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 12ம் தேதி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: கிஷ்த்வார் மற்றும் கார்கில் பகுதிகளில் ஏற்பட்ட மேகவெடிப்பு நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.M G.தமீம் அன்சாரி

Leave a Reply

Your email address will not be published.