திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை புதன்கிழமை வனத்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டது.
50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழப்பு.
மணப்பாறை ஜூலை 22 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை புதன்கிழமை வனத்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டது.
மணப்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட காடைப்பிச்சம்பட்டி வனப்பகுதியில் காட்டெருமை, மயில், குரங்கு ,நரி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகள் தங்களுக்கான உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை நாடி வருவது வழக்கம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை முத்தழகம்பட்டியைச் சேர்த்த தனிநபருக்குச் சொந்தமான 50 அடி ஆழ கிணற்றுக்குள் காட்டெருமை ஒன்று தவறி விழுந்துள்ளது. கிணற்றில் காட்டெருமை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற வனத்துறையினர் காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறிது நேரத்திலேயே இருள் தொடங்கியதால் காட்டெருமை மீட்கும் பணி நிறுத்தப்பட்டு, புதன் கிழமை காலை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், கிணற்றுக்குள் இருந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து இறந்த காட்டெருமையின் உடலை துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்களின் உதவியோடு கிணற்றுக்குள் இருந்து மீட்டு, கால்நடை மருத்துவரால் உடற்கூராய்விற்கு உட்படுத்தி, பின் ஜேசிபி இயந்திரம் மூலம் குழிதோண்டி வனப்பகுதியிலேயே அடக்கம் செய்தனர்
P. பாலு மணப்பாறை செய்தியாளர்