தடுப்பூசி விவகாரத்தில் குஷ்பு, எடப்பாடி பழனிசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைக்கிறார்கள் – புள்ளிவிவரங்களை அடுக்கிய அமைச்சர் மா.சுப்ரமணியன்
தமிழக அரசு ஜூன் மாதம் 5லட்சம் தடுப்பூசியை வீணடித்துவிட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினார்.
சென்னை கிண்டி தடுப்பூசி முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்துக்கொண்டார். அப்போது பேசியவர், “அ.தி.மு.க அரசில் தினசரி 61,441 தடுப்பூசி செலுத்தபட்டது. தற்போது தி.மு.க ஆட்சியில் 1,61,297 தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் 4 லட்சம் டோஸ்கள் வீணடிப்பு. தற்போது தமிழக அரசு 3,02,704 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட தடுப்பூசிகளை காட்டிலும் கூடுதல் டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தபட்டுள்ளது.
தடுப்பூசி வீணடிப்பு திமுக ஆட்சியில் குறைக்கபட்டுள்ளது. தமிழகத்தில் பற்றாக்குறையை நீக்கி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் உருமாறிய கொரனோ வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். உருமாறிய அனைத்து கொரோனா வகைகளையும் எதிர்கொள்ள தடுப்பூசியே முக்கியம்.எனவே தடுப்பூசி செலுத்துவது அவசியம்.
வாங்கிய தடுப்பூசிகளை கூட முழுவதுமாக போடாத ஒரு அரசாக கடந்த கால அ.தி.மு.க அரசு இருந்தது.இப்போது தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.