பள்ளத்தில் சிக்கிய குதிரை – ஹெலிக்காப்டர் உதவியுடன் போராடி மீட்ட மீட்புப்படையினர்!

பள்ளத்தில் சிக்கிய குதிரை – ஹெலிக்காப்டர் உதவியுடன் போராடி மீட்ட மீட்புப்படையினர்!

கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் முதலுதவி அளித்த மீட்பு படையினர் உடனடியாக குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

அமெரிக்காவில் பள்ளத்தில் கான்கிரீட் சுவர்களுக்குள் மாட்டிக்கொண்ட குதிரையை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் வேகமாக ஓடிய குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக தவறி விழுந்து சாலையின் ஓரமாக இருந்த பள்ளத்தில் கான்கிரீட் சுவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டது.

இதனைக் கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஆரஞ்ச் கவுன்டி தீயணைப்பு படையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று குதிரையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் போது தவறி விழுந்ததில், மிகவும் குறுகலான மற்றும் இக்கட்டான சுவர்களுக்கு மத்தியில் குதிரை சிக்கியுள்ளது.

கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் முதலுதவி அளித்த மீட்பு படையினர் உடனடியாக குதிரையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். குதிரை சிக்கிய இடம் நெருக்கமாகவும், அதன் தலை மற்றும் கால் பகுதி சுவர்களுக்கு அடியிலும் சிக்கிக் கொண்டதால், மிகவும் கவனமாக மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மெஷின்கள் உதவியுடன் மெதுவாக அப்பகுதியில் இருந்த இடர்பாடுகளை களைந்த அவர்கள், ஹெலிக்காப்டரை வரவழைத்து அதன் உதவியுடன் குதிரையை மீட்டனர். இந்த மீட்பு பணியில் குதிரைக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. குதிரை மீட்க்கப்பட்டவுடன் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

குதிரை சிக்கியிருந்த இடத்தில் ஆரஞ்ச் கவுண்டி மீட்பு படையினர் மேற்கொண்ட மீட்பு பணிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு அதனுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் மேற்கொண்ட மிகவும் சவாலான மற்றும் வெற்றிகரமான மீட்பு பணி என தீயணைப்புத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய ஆரஞ்ச் கவுண்டி தீயணைப்புத்துறை அதிகாரிகள், ‘சான் ஜூவான் காபிஸ்ட்ரோனோ இடத்தில் குதிரை ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக தகவல் கிடைத்தது. ஓடும்போது தவறி பள்ளமான தரைப்பகுதியில் விழுந்திருக்கும் என எண்ணினோம்.

காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கருதி முன்கூட்டியே கால்நடை மருத்துவர்களையும் உதவிக்கு அழைத்துச் சென்றோம். நாங்கள் சென்று பார்த்தபோது, குதிரை சிக்கியிருந்த இடம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிகவும் சிக்கலான இடத்தில் சுவர்களுக்கு அடியில் குதிரையின் கால் மற்றும் தலை இருந்தது. எப்படி இப்படி வந்து சிக்கியது என்பது எங்களுக்கே வியப்பாக இருந்தது. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் குதிரைக்கு முதலுதவி கொடுத்தனர்.

பின்னர், குதிரைக்கு எந்தவித காயங்களும் ஏற்படாமல் மீட்பு பணிகளை மேற்கொண்டோம். ஒரு கட்டத்தில் ஹெலிக்காப்டரின் உதவி தேவைப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் திறமையாக செயல்பட்டு எந்தவித காயமுமின்றி குதிரையை மீட்டோம். அண்மைக் காலத்தில் நாங்கள் மேற்கொண்ட மிகவும் சவாலான மீட்பு பணிகளில் இதுவும் ஒன்று” எனக் கூறினார். மீட்பு பணிகளின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் தீயணைப்புத் துறையினரின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

செய்தி: S.MD.ரவூப்

Leave a Reply

Your email address will not be published.