மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு.
நீதிபதி கவுசிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு என மம்தா பனர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.
கொல்கத்தா, மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. எனினும், நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,“நந்திகிராம் தொகுதியில் பணப்பட்டுவாடா, லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போதும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி கோரியுள்ளார்
இந்த மனு மீதான விசாரணை கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கவுசிக் சந்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி கவுசிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு என மம்தா பனர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், கவுசிக் சந்தா வழக்கை விசாரிக்கவும் மம்தா பானர்ஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலக மறுத்த கவுஷிக் சந்தா, மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதித்துறையை தவறாக சித்தரிப்பதற்காக இந்த அபராதம் விதிப்பதாகவும், கொரோனாவால் பாதிப்படைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது..
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.M G தமீம் அன்சாரி