தனி அதிகாரிகளின் பதவி காலம் ஜூன் 30-ந் தேதி முடிவடைய உள்ளதால் இவர்களின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது

உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் பதவி காலத்தை மேலும் 6 மாதம் நீடிக்கும் மசோதாவை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது.

கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை காரணமாக அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே புதிதாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவற்றுக்கு 3 அடுக்கு ஊராட்சிகளின் வட்டார எல்லைக்கு உட்பட்ட தொகுதிகளை வரையறை செய்வதற்கான அறிவிப்பையும், முன் ஏற்பாடு பணிகளையும் திட்டமிட்டபடி நிறைவு செய்ய இயலவில்லை.

இவற்றை செய்து முடித்தால்தான் இந்த மாதத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த அட்டவணை தயாரிக்க முடியும். இதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

தற்போது ஊரடங்கின் காரணமாக தேர்தலுக்கு முந்தைய பணிகள், வாக்குச்சாவடிகளை அடையாளம் காணுதல், வாக்காளர் பட்டியலை தயாரித்தல், வாக்குப்பதிவு அலுவலர்களின் மென்பொருளை உருவாக்குவது ஆகியவற்றை உடனே நிறைவேற்ற இயலவில்லை.

மேற்கண்ட 9 மாவட்டங்களின் தனி அதிகாரிகளின் பதவி காலம் ஜூன் 30-ந் தேதி முடிவடைய உள்ளதால் இவர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31-ந் தேதி வரை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்
ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.