உணவகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் எச்சில் தொட்டு பிளாஸ்டிக் உறைகளை எடுக்காதீர்

மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர்களை அவ்வப்போது ஆலோசித்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தவிர்க்க முடியாத காரணங்களால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டாலும் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு இதுவரையில் தடை விதிக்கப்பட்ட நிலையில், பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.

உணவக பார்சல் சேவையில் பிளாஸ்டிக் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது.

மளிகைக் கடைகள், இறைச்சி, மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்தக் கடைகளிலும் பிளாஸ்டிக் உறைகளின் பயன்பாடு மிகையாக உள்ளது.

உறைகளை எடுக்கும் போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு அந்த உரைகளை எடுப்பது, பொருள்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு வழி வகுக்கும்.

இதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிளாஸ்டிக் உறைகளை எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டது.

இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெற்றி பெற மக்களின் பங்களிப்பு அவசியம் என்பது மறுக்க முடியாதது.

உணவு மளிகை, பேக்கரிப் பொருள்களைப் பார்சல் செய்யும்போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமை யாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்

செய்தியாளர்
ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.