மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன் பெறுகிறது. தமிழகத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு தண்ணீரை அளிப்பதில் மேட்டூர் அணையின் பங்கு மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டு இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அணையின் வலது கரையில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து, மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார். தண்ணீர் திறப்பு நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேட்டூர் அணியில் இருந்து 18-வது முறையாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 7 முதல் 10 நாட்களில் கடைமடை பகுதியை சென்றடையும். ஜூன் மாதம் சரியான நேரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி நடப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். செய்தியாளர். ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்